அஞ்செழுத்து மந்திரமான நமசிவாயத்தை ‘பஞ்சாட்சரம்’ என்பர். இந்த மந்திரத்தை சிவபெருமானே ஓதும் திருத்தலம் விருத்தாசலம். இத்தலத்திற்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இங்கு திசைக்கு ஒன்றாக நான்கு ராஜகோபுரம், கோயிலுக்குள் ஒன்றுமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின் போது இங்குள்ள ஐந்து கொடி மரங்களிலும் கொடியேற்றுவர். வலது பக்கம் தலையைச் சாய்த்தபடியே ஐந்து நந்திகள் இங்கிருப்பது சிறப்பு. மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் தீர்த்தங்கள் இங்கு ஐந்து. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாத சர்மா, அவைர்த்தணி என்னும் பஞ்ச ரிஷிகள் வழிபட்டு முக்தி பெற்றனர்.