அருவிக்குப் பெயர் பெற்ற குற்றாலத்தில் வீற்றிருப்பவர் குற்றாலநாதர். இங்குள்ள அருவியை சித்திரகங்கை என்பர். இதுவே குற்றாலம் கோயிலின் தல தீர்த்தம். இங்கே ஈரக்காற்று அடிப்பதால் குற்றாலநாதர் தலைவலியால் சிரமப்படுகிறார் என்று பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகக் கூறுகின்றனர். அதற்காக சுவாமிக்கு மூலிகை தைலம் தடவுவது (தைலக்காப்பு) உண்டு. வற்றாக் குளிரும் மாறாத் தலையிடியும் என்ற பழமொழியால் இதை அறியலாம். இங்கு குறும்பலா மரத்தடியில் இறைவன் வீற்றிருக்கிறார். வேறெங்கும் இல்லாத சிறப்பாக இம்மரத்தின் மீது பாடப்பட்ட பத்துபாடல்கள் தேவாரத்தில் உள்ளன. வேதமே பலா மரமாக விளங்குவதாக தலபுராணம் கூறுகிறது. திருக்குறும்பலாபதிகம் என்னும் பதிகத்தைப் பாடியவர் திருஞானசம்பந்தர். மலையும், இங்கிருக்கும் பலா மரங்களும், அதில் உள்ள பழங்களும், பழத்தின் கொட்டைகளும் சிவலிங்கமாகத் திகழ்வதாக தலபுராணம் சிறப்பிக்கிறது.