பதிவு செய்த நாள்
01
நவ
2021
04:11
எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால், அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்க திறமை வேண்டும். திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு வேண்டும். இவைகள் இருந்தால் சாதனை படைக்கலாம்.
‘துாய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இதற்கும் மேலாக அன்பு வேண்டும்’ என்கிறார் விவேகானந்தர்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள். எதை இழந்தாலும் இழக்கலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று தன்னம்பிக்கைதான்.
தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ அல்லது அலுவலக நண்பர்களோ சுற்றியருப்பவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். பேச்சு மென்மையாகவும், இனிமை கலந்ததாகவும் இருக்கட்டும். மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற நினைத்தால் நீங்கள் முதலில் அவர்களுக்கு உதவி செய்யத் தொடங்குங்கள்.
ஒரு பிரச்னை ஏற்பட்டால் அது நம் திறமைக்கு விடப்பட்ட சவால் என நினைத்து பிரச்னையை அணுகுங்கள்.
வெற்றி என்பதும், தோல்வி என்பதும் வாழ்வில் கிடைக்கும் அனுபவங்களே. தோல்வி எனப்படுவது வெற்றிக்கு செலுத்தும் காணிக்கை. அதற்காக உற்சாகம் இழப்பது கூடாது.
உயிரும் உடலும் போல எண்ணமும் செயலும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. எப்படியாவது வாழ்ந்து விடுவோம் என்று எண்ணுவதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்வதே வாழ்க்கை.
. உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்காதீர்கள். பிறரிடம் காணும் குறைகளை நம்மிடம் அணுகாமல் விழிப்புடன் இருங்கள். உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் மற்றவர்களின் துன்பங்களை போக்க கைகொடுங்கள்.
நம் மீது நம்பிக்கை வைத்தவனை ஏமாற்றுவது சாமர்த்திய செயல் அல்ல. அது துரோகம். வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள். ஒரு செயலை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணுங்கள்.
பயணப்படாத பாதை மறைந்துவிடுவது போல பயணப்படாத திறமை அழியும். அழகு என்பது பொருள்களில் இல்லை. அது நம் பார்வையில் இருக்கிறது. நேர்மையான வழியில் வராத எதுவும் நிலைப்பதில்லை. நிறைவைக்
கொடுப்பதும் இல்லை. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். எண்ணம், சொல், செயலால் எப்போதும் நல்லதையே சிந்தியுங்கள்.
உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்து உயர்வு இவையே நல்லோர் இயல்பு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினால் உள்ளொளி தீயாகி உடலைக் கெடுத்துவிடும். உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்தில் உண்டாகும் ஒழுங்கற்ற எண்ணமே என்கிறார் வேதாத்ரி மகரிஷி.
எண்ண ஓட்டம் சரியாக இருந்தால் அங்கே தன்னம்பிக்கை குடியிருக்கும். நம்பிக்கை இருக்கும் இடத்திற்கு வெற்றி தேடி வரும்.