ராஜபாளையம்: ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் விஜர்சன நிகழ்ச்சி நடந்தது. ராஜபாளையம் தர்மபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 34வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் சிலை செய்யப்பட்டு நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றை காரணம் காட்டி சிலைகளை கரைப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கப்படி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் அனுமதி பெற்றார். இதனையடுத்து நேற்று மாயூரநாதசுவாமி கோயில் நுழைவு பகுதியில் உள்ள ஆதி வழி விடு விநாயகர் கோயில் அருகே இருந்து ஆக்ரோஷ கணபதி, நாக ராஜ கணபதி, ஒட்டகம், காண்டாமிருகம் போன்ற வாகனங்களில் அமர்ந்தபடி இருந்த விநாயகர் சிலை உள்ள ரதங்களை தனித்தனியாக பழைய பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலைமன்றம் வழியே கொண்டு சென்று புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள புதியாதி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழி நெடுக தரிசனம் செய்து வழிபட்டனர்.நிகழ்ச்சியை முன்னிட்டு வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.