பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி விழா விமரிசையாக நடக்கிறது. இதன் முன்னோட்டமாக நகர் முழுவதும் பல்வேறு அமைப்பினர் நேற்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் பூக்களை தட்டுகளில் பரப்பி வைத்திருந்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 9:00 மணி தொடங்கி மேள தாளம் முழங்க அனைத்து பூத்தட்டுகளையும் பக்தர்கள் கையில் ஏந்தி கோயிலை அடைந்தனர். இன்று அதிகாலை பல வண்ண மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்து. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அனைத்து பூக்களும் பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து மார்ச் 23 காப்பு கட்டுதல், மறுநாள் சிங்க கொடி ஏற்றப்பட்டு பங்குனி விழா துவங்க உள்ளது.