சிக்கிலில் வேல் வாங்கி, செந்தூரில் சூரசம்ஹாரம் என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மனுடன் போரிட்டு அழித்தபின் தன் படைகளுடன் செந்தூரில் வந்து தங்கினார். அங்கு ஈசனை வழிபடுவதற்கு தேவதச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். இங்கே சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.
கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதை சாயாபிஷேகம் (சாயா -நிழல்) என்பர். திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.