சஷ்டி விரதம் இருப்பவர்கள் இந்த ஆறுநாளிலும் காலை, மாலை நேரத்தில் முருகப்பெருமானை வழிபடும் விதத்தில் இதைப் படியுங்கள்.
* செந்திலாண்டவனே! சேவல் கொடி ஏந்தியவனே! கார்த்திகைப் பெண்கள் வளர்த்த பாலகனே! சிவனார் பெற்ற செல்வமே! கங்கையில் தவழ்ந்த காங்கேயனே! பழநியின் தலைவனே! ஆறுமுகனே! குறிஞ்சித் தெய்வமே! ஆறுபடை வீட்டில் கோயில் கொண்டவனே! சஷ்டிநாதனே! எங்களுக்கு நல்வாழ்வு தந்தருள வேண்டும்.
* செந்தூர் கடற்கரையில் அருள் செய்பவனே! தெய்வானை நாயகனே! சரவண பவனே! சண்முகனே! மால் மருகனே! வள்ளி மணாளனே! சுப்பிரமணியனே! சூரனுக்கு வாழ்வு அளித்த சுந்தரனே! விசாக நாளில் அவதரித்தவனே! தந்தைக்கு உபதேசம் செய்தவனே! சுவாமி நாதனே! குமரக் கடவுளே! மயில் வாகனனே! தஞ்சமடைந்தவரைக் கரை சேர்ப்பவனே! எங்களுக்கு செல்வ வளத்தை அளிப்பாயாக.
* நாழிக்கிணறு நாயகனே! அருணகிரி நாதருக்கு அருள் செய்தவனே! அவ்வைக்கு கனி தந்தவனே! செங்கோட்டு வேலவனே! திருப்பரங்குன்றத்தில் அமர்ந்தவனே! பால தண்டாயுதபாணியே! தணிகைமலை நாதனே! சிக்கல் சிங்கார வேலனே! குன்றக்குடியானே! பன்னிருகை பரமனே! சூரசம்ஹாரனே! சக்தி உமை பாலனே! எங்களுக்கு மழலைச் செல்வத்தைத் தந்தருள வேண்டும்.
* திருச்சீரலைவாய் சண்முகனே! மயிலேறிய மாணிக்கமே! குன்றுதோறும் வாழ்பவனே! ஆனைமுகன் தம்பியே! கந்தப் பெருமானே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரா! குறை யாவும் தீர்க்கின்ற குருநாதனே! திருமாலின் மருமகனே! குமர குருபரனே! எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வாயாக.
* திருச்செந்தூரில் வாழ்பவனே! கதிர்காம வேலவனே! அகத்தியருக்கு அருள் புரிந்தவனே! குகப் பெருமானே! வயலுõரில் உறைபவனே! அருணகிரியாருக்கு உபதேசித்தவனே! ஞான பண்டிதனே! சிவகுமாரா! சோலைமலை தங்கமே! உமையாள் மைந்தனே! நாங்கள் அனுஷ்டிக்கும் சஷ்டி விரதம் நல்லபடியாக பூர்த்தியாகவும், உலக உயிர்கள் எல்லாம் குறையின்றி வாழவும் பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.