உணவைத் தானே கடவுளுக்கு நைவேத்யம் செய்வார்கள்! பாவாடையை நைவேத்யம் செய்வார்களா என்று சந்தேகம் வரலாம். கந்தசஷ்டியின் மறுநாள் முருகன் கோயில்களில் ‘பாவாடை நைவேத்யம்’ நடக்கும். ‘பாவாடை’ என்ற சொல்லுக்கு ‘நிலத்தில் விரிக்கும் சேலை’ என்பது பொருள். திருமண வீடுகளில் சமைத்த சோற்றை வெள்ளைத்துணி விரித்து கொட்டி வைப்பார்கள். அதுபோல சேலைகளில் 100 படி (150 கிலோ) அரிசியில் தயாரித்த தயிர் சாதத்தை கொட்டுவார்கள். முருகனும், அவனது படைவீரர்களும் அசுரர்களுடன் போரிட்டதால் பசியுடன் வருவார்கள். அந்தப் பசிக்கேற்ப சாதம் வேண்டாமா! அதற்காகவே அதிகளவு உணவு சமைக்கப்படுகிறது. வெறும் தயிர்சாதத்தை சாப்பிடுவது சிரமம் அல்லவா! அதனால் சைடு டிஷ்ஷாக நெல்லிக்காய், மாங்காய் ஊறுகாய், தேன்குழல் (முறுக்கு), வடை, இனிப்புக்காக அப்பம் என படைப்பார்கள். தற்போது இந்த பழக்கம் குறைந்து விட்டது. ஒரு மரப்பெட்டிக்குள் ஓலைப்பாய் இட்டு, அதன்மேல் தலைவாழை இலை விரித்து உணவு படைக்கிறார்கள்.