தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் ‘படைவீடு’ எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்துார் மட்டுமே. ஆனால் மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து ‘ஆறுபடை வீடு’ என்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நுால்கள் சங்க காலத்தில் ‘ஆற்றுப்படை’ எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் அருள்பாலிக்கிறார். அவரைச் சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நுால் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நுால் என்பதால் இது, ‘திருமுருகாற்றுப்படை’ (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, ‘ஆறுபடை’ என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.