திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் உள்ளது. முருகன் இங்கு கடலை பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில் தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால் எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கும். கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தன்று நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். ஆனாலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.