பதிவு செய்த நாள்
25
நவ
2021
05:11
தேவிபட்டினம்: பரிகார பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யும், நபர்களின் ஏஜெண்டுகளாக செயல்படும் புரோக்கர்களால், நவபாஷாணம் வரும் வெளியூர் பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் நவபாஷாணம் அமைந்துள்ளது. புனித தலமான இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்பட்டு வரும், பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோவிலை நிர்வகித்து வரும், இந்து அறநிலை துறை சார்பில், பரிகார பூஜைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நவபாஷாண திருக்கோவில் எதிரே சிலர் அனுமதியின்றி பரிகார பூஜைகள் என்ற பெயரில், வெளியூர் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து நவபாஷாணத்திற்கு வரும் பக்தர்களை, சங்கல்ப மண்டபம் எதிரே புரோக்கர்கள் ரோட்டிலே வழிமறித்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்கு ஏஜெண்டுகளாக செயல்படும் புரோக்கர்களுக்கு, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிகார பூஜைகள் செய்பவர்களால், கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நவபாஷாண பகுதியில், தள்ளுவண்டியில் ஐஸ் விற்பனை செய்யும் தொழிலாளி முதல், சில வர்த்தகர்கள் வரை ரோடு பகுதியில் நின்று கொண்டு, பக்தர்களை வழிமறித்து புரோக்கர் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பக்தர்களை வழிமறிக்கும் புரோக்கர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.