திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில், சோழர் கால பகவதி சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, ஜவ்வாதுமலையில் புலியூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, கோட்டூர் கொல்லை கிராம பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கொற்றவை சிலை ஒன்றும், அதன் அருகில் சோழர்கால கல்வெட்டும் கண்டறியப்பட்டது. கொற்றவை சிலை, மூன்று அடி உயரம் ஒன்றரை அடி அகலம் கொண்டதாக உள்ளது. இது குறித்து, கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் கூறியதாவது: இவை, 11ம் நுாற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தை சேர்ந்தது. கல்வெட்டில் பகவதி என குறிப்பிட்டிருந்தாலும், சிற்பத்தில் எருமை தலை மீது நிற்கும் துர்க்கை (கொற்றவை) கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு அமைந்துள்ளது. கொற்றவையை பகவதி என்ற பெயரிலும் வழிபடப்படுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.