ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.நேற்று பவுர்ணமி தினம் என்பதால் காலை முதலே பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசன வழியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மதியம் 3.00 மணிக்கு விளக்கு பூஜையும் நடந்தது.இரவு 8.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் பஸ்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிக அளவில் இருந்தது.பவுர்ணமி தின பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.