பதிவு செய்த நாள்
04
ஜூலை
2012
11:07
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெப்பக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதூரில் புகழ்பெற்ற ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், தேரடி சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் நடுவில், நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்தில் வருடந்தோறும் நான்கு நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். அதைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக, குளத்தை சுற்றி சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையை பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுத்தி வந்தனர்.
ஆக்கிரமிப்பு: விளை நிலங்களுக்கு செல்லவும், உற்பத்தியாகும் பொருட்களை மாட்டு வண்டியில் எடுத்து செல்லவும், தெப்ப குளத்தை சுற்றி போடப்பட்ட சாலை பெரிதும் உதவியாக இருந்தது. நாளடைவில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது. தெப்பக்குளம் சாலையில், ஆக்கிரமிப்பாளர்கள் குடிசை போட்டனர். அவற்றுக்கு நிபந்தனையின்றி மின் இணைப்பு வழங்கப்பட்டது. குடிசை வீடுகள் நாளடைவில் நிரந்தர வீடுகளாக மாறியது. வீடுகளை வாடகைக்கு விட்டனர். அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தெப்பக்குளத்தில் விடப்பட்டது. தெப்பக்குளம் கழிவுநீர் தேக்கமாக மாறியது. நாளடைவில் தெப்போற்சவம் நிறுத்தப்பட்டது.
கோரிக்கை: தெப்பக்குளம் இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு முன்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தெப்பக்குளத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, குளத்தை சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறும்போது,""தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மூலம், ஆக்கிரமிப்பாளர் 30 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தெப்பக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.