அன்னூர் மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா வரும் 9ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2021 11:12
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும் 9ம் தேதி துவங்குகிறது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தேர்த் திருவிழா வருகிற 9ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. வரும் 10ம் தேதி காலையில் கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடக்கிறது. 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் மன்னீஸ்வரர் உலா வந்து அருள் பாலிக்கிறார். 15ம் தேதி காலையில் அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 16 ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்து அருளுதலும் 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. 17ம் தேதி இரவு குதிரை வாகனத்திலும், 18ம் தேதி காலையில் தெப்போற்சவமும் நடக்கிறது. இத்துடன் திருவிழா நாட்களில் இரவு சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி, பஜனை ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருமுருகன் அருள்நெறி கழகத்தினர் செய்து வருகின்றனர்.