பதிவு செய்த நாள்
10
டிச
2021
04:12
திருப்பூர்:கடவுளிடம் வியாபார பக்தி கூடாது. அவரிடம் பரிபூரணமாக சரணாகதி அடைவது தான் உண்மையான பக்தி, என நாகை முகுந்தன் பேசினார்.திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவில், மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த கலை நிகழ்ச்சியில், எது பக்தி எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசியதாவது:கோவிலில் நாம் பக்தியோடு வழிபாடு செய்கிறோம் என்று மனதில் நினைக்கிறோம். ஆனால், எந்தவித பக்தியோடு வழிபாடு செய்கிறோம் என்பது தான் முக்கியம். நம் வேண்டுதலை நிறைவேற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். நிறைவேறினால், நேர்த்தி கடன் செய்கிறோம் என்று வேண்டுகிறோம்.இதுபோன்று வேண்டுவது, வியாபார பக்தி. கடவுள் எதையும், நம்மிடம் எதிர்பார்த்து இருப்பதில்லை. அவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்பவர். கடவுளிடம் பரிபூரணமாக சரணாகதி அடைவது தான் உண்மையான பக்தி.கடவுளிடம் எதையும் எதிர்பார்த்து கேட்க வேண்டாம். அவராக பார்த்து செய்வார். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது, ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு, சரணாகதி மட்டும் தான். குழந்தை உள்ளத்தோடு கடவுளிடம் நம்மை ஒப்படைத்தால், கருணை கொண்டு, வாழ்க்கை பாதையை கடப்பதுக்கு உதவி செய்வார்.இவ்வாறு, அவர் பேசினார்.