பதிவு செய்த நாள்
21
டிச
2021
02:12
சூலூர்: சூலூர் வட்டார சிவாலயங்களில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் வட்டார சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நடராஜர் அருள்பாலித்தார். சூலூர் வைத்தியநாத சுவாமி கோவில், சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடந்த தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் காடாம்பாடி சவுடேஸ்வரி அம்மன் கோவில், மாகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதம் மற்றும் மாங்கல்ய நோன்பு கொண்டாடப்பட்டது. முன்னதாக மாகாளியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தி பாடல்களை பெண்கள் பாடினர். இதேபோல், நீலம்பூர் மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய நோன்பு பூஜைகள் நடந்தன. அனைவருக்கும் மஞ்சள் சரடு, வளையல்கள், குங்கும பிரசாதம் வழங்கப்பட்டன.