அன்னூர்: புளியம்பட்டி, அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. புளியம்பட்டியில், பிரசித்திபெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐந்தாவது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. புதிதாக 63 நாயன்மார்கள், இராஜராஜ சோழன், திருவள்ளுவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த 16ம் தேதி நிலத்தேவர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 17ம் தேதி முதல் கால, இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. 18ம் தேதி கோபுர கலசங்கள் நிறுவும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் 63 நாயன்மார்கள், ராஜராஜசோழன், திருவள்ளுவர், அண்ணாமலையார் மற்றும் கோபுர கலசங்களுக்கு பேரூராதீனம், சாந்தலிங்க மருதாசல அடிகள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பேச்சாளர் பர்வீன் சுல்தானா தலைமையில் சொற்பொழிவு நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.