பதிவு செய்த நாள்
22
டிச
2021
03:12
இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சிகரம் மவுன்ட்அபு. ‘ராஜஸ்தானின் சிம்லா’ எனப்படும் இந்த மலைப்பகுதி புகழ் மிக்க கோடை வாசஸ்தலமாகும். இந்த மலை மீதுள்ள கபாலதேவி இங்குள்ள மக்களின் குலதெய்வமாகத் திகழ்கிறாள். இவளை தரிசித்தால் நோயற்ற வாழ்வு, செல்வ வளம் கிடைக்கும்.
தட்சனின் மகளான தாட்சாயிணி தந்தையின் எதிர்ப்பை மீறி சிவனை திருமணம் செய்தாள். சிவன் மீது வெறுப்பு கொண்டான் தட்சன். தான் நடத்திய யாகத்திற்கு மருமகனை அழைக்கவில்லை. வருந்திய தாட்சாயிணி நியாயம் கேட்க தட்சனோ அவமானப்படுத்தினான். அவள் யாக குண்டத்தில் குதித்து உயிர் விட்டாள். மனைவியின் உடலைத் தோளில் தாங்கியபடி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதையறிந்த மகாவிஷ்ணு சக்கரத்தால் தாட்சாயிணியின் உடலை 51 கூறுகளாக வெட்டி நாடெங்கும் சிதற விட்டார். அவளின் இடது கபாலம் மவுன்ட் அபு மலைப்பகுதியில் விழுந்தது. அந்த இடத்தில் அம்பிகைக்கு கோயில் கட்டப்பட்டது. காலப்போக்கில் கோயில் சிதிலம் அடையவே சிலை பூமிக்குள் புதைந்தது.
பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை குறிப்பிட்ட இடத்தில் தான் புதைந்து கிடப்பதையும், பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் தெரிவித்தாள். இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் உதவியுடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது.
கோயிலுக்கு வெளியே குளம் உள்ளது. தேவலோக பசுவான காமதேனுவின் அம்சமாகத் திகழும் இதன் தீர்த்தம் பால் போல வெண்மையாக உள்ளது. கபால தேவியின் அபிேஷகத்திற்கு இதை பயன்படுத்துகின்றனர். மலைக்குச் செல்ல 365 படிகள் உள்ளன. கருவறையில் அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறாள். நான்கு கைகள், கண்கள் மட்டும் பளிச்சென தெரியும் விதத்தில் பூக்கள், துணிகளால் அம்மனை அலங்கரித்துள்ளனர். தனி சன்னதியில் பைரவர் வீற்றிருக்கிறார். அம்மன், சுவாமியை தரிசித்து விட்டு கோயிலை விட்டு வெளியே வந்தால் மவுன்ட் அபுவை முழுமையாகக் காணலாம். மாலையில் கடும் குளிர் காற்று வேகமாக வீசுவதால் வயதானவர்கள் பகலில் மலையேறி அம்மனை தரிசிப்பது நல்லது. வாசலில் பெரிய சூலம் உள்ளது. மலை மீதேற 365 படிகள் உள்ளன. வசிஷ்டர், விஸ்வாமித்திரருக்கு இடையே கருத்து வேறுபாடு வந்தபின் வசிஷ்டர் இங்கு வந்து தங்கியதாக தலவரலாறு கூறுகிறது. 22 கி.மீ., நீளம், 9 கி.மீ. அகலம் கொண்ட பீடபூமியான அபுமலையின் புராணப் பெயர் அற்புதாஞ்சல். ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள இதற்கு ‘அற்புதாரன்யா’ என்றும் பெயருண்டு. .
எப்படி செல்வது
* டில்லி, பலன்பூர், அகமதாபாத் ரயில் பாதையில் அபு உள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு 28 கி.மீ.,
* உதய்பூரில் இருந்து 185 கி.மீ.,
விசேஷ நாள்:
நவராத்திரி, மகாசிவராத்திரி