பதிவு செய்த நாள்
24
டிச
2021
03:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காந்திசாலையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு அரிய வகை பொருள் காட்சிக்கு வைப்பது வழக்கம். அதன்படி இம்மாதம், 300 ஆண்டுகள் பழமையான மரத்தினாலான காலபைரவர் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சேகரிக்கப்பட்ட இச்சிற்பம், 8 செ.மீ., உயர பீடத்தில், 36 செ.மீ., உயரமும், 17 செ.மீ., அகலமும் உள்ளது. நின்ற கோலத்தில் எட்டு கைகளுடன் உள்ள காலபைரவர், உடுக்கை, பாசக்கயிறு, கத்தி, கோடாரி, அம்பு, வில், சூலம், கபாலம் ஆகியவற்றை தாங்கி நிற்கிறார். சிவபெருமானின் ருத்திர ரூபமாக கூறப்படும் காலபைரவர், சிவபெருமானின், 64 திருமேனிகளில் ஒருவர். சிவன் கோவிலில் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் நாகத்தை பூணுாலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், கழுத்தில் கபால மாலையுடன் காட்சி தருவார். இவரது வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணகிரி அருங்காட்சியத்தில் வைத்துள்ள இச்சிற்பத்தை, பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.