பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
12:07
திருநெல்வேலி : பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரமாண்ட யாகசாலைகள், ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், தனபூஜை, தேவதா அனுக்கை, கணபதிஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, தீபாராதனையும், மாலையில் விக்னேஸ்வர பூஜை, தீர்த்த சங்கிரஹணம், பிரவேசபலி, வாஸ்துசாந்தி, தீபாராதனை நடந்தது. 2ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்கி நடந்துவந்தது. தொடர்ந்து தினமும் யாகசாலை பூஜைகளும், சிறப்பு ஹோமங்களும் நடந்தது.
கும்பாபிஷேகம்: கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 6வது கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், திரவ்யாகுதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் நடந்தது. காலை 11 மணிக்கு மங்கள வாத்தியம், பஞ்சவாத்தியம் இசைக்கப்பட, திருமுறைகள் பாடப்பட வேத மந்திரங்களை வேத விற்பனர்கள் ஒலிக்க விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. இரவு திருக்கல்யாணம், பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாள் வீதியுலா நடந்தது. கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி வேதபாடசாலை முதல்வர் செல்வம் பட்டர், கோயில் அர்ச்சகர்கள் குமார் பட்டர், ராமகிருஷ்ணன் குழுவினர் நடத்திவைத்தனர்.
10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்: கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் பரிமாறும் பணியில் நெல்லை ம.தி.தா.இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பக்தர் பேரவையினர் ஈடுபட்டனர். அன்னதான ஏற்பாடுகளை ரஜினி மன்ற பொருளாளர் பாலகிருஷ்ணன், சத்தியமூர்த்தி மற்றும் வேல்முருகன் வழிபாட்டுக்குழு பக்தர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் சுவாமி அகிலானந்தா, சுவாமி சங்கரானந்தா, மேயர் விஜிலா, உதவிக் கமிஷனர் பாஸ்கர், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பாப்புலர் முத்தையா, செந்தில் ஆறுமுகம், கவுன்சிலர் வக்கீல் பரமசிவன், உமாபதிசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.