பதிவு செய்த நாள்
26
டிச
2021
03:12
திருப்பதி: திருமலை தேவஸ்தான இணையதளத்தில் சர்வதரிசன இலவச முன்பதிவு டோக்கன்கள் நேற்று வெளியிடப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். நாளை இதற்கான டோக்கன் ெவளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த சர்வ தரிசன நேரடி தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டதால், திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு வருகின்றனர். இந்நிலையில் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளுடன், சர்வதரிசன இலசவ டோக்கன்களும் இணையதள முன்பதிவு வாயிலாக அளிக்கப்பட்டு வருகிறது.
ஜன., மாதத்திற்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் டிச., 23 மாலை 4:00 மணிக்கும், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் டிச., 24 காலை 9:00 மணிக்கும் வெளியிடப்பட்டன.மேலும் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி ஜன., 13ல் வருவதை அடுத்து தேவஸ்தானம் இம்முறை பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப 10 நாட்கள் வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து பக்தர்கள் அனைவரும் ஜன., மாத டிக்கெட் வெளியிட்டிற்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். நேற்று முன்தினம் காலை டிக்கெட் வெளியிடப்பட்ட 15 நிமிடங்களில் வைகுண்ட வாயில் தரிசனத்திற்கான முன்பதிவு முடிவடைந்தது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் அரை மணிநேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை சர்வதரிசன இலவச தரிசன டோக்கன்கள் வெளியிடப்படும் என செய்தி வெளியானது. ஆனால், தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகளின் முன்பதிவு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சர்வதரிசன டோக்கன்கள் முன்பதிவிற்காக காத்திருந்து ஏமாற்ற அடைந்தனர். ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சர்வ தரிசன டோக்கன் வெளியீடு குறித்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜன., மாதத்துக்கான சர்வ தரிசன டோக்கன்கள் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.