பதிவு செய்த நாள்
28
டிச
2021
12:12
திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்திற்கு, சுகாதார தரமதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
இக்கோவிலில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதைதவிர, புளியோதரை, சர்க்கரை பொங்கல், கேசரியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த நிலையில், இக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானத்தை, செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதில், உணவு சமைக்கும் இடம் மற்றும் உணவு பரிமாறப்படும் இடம், உணவு பொருட்களின் தரம், உணவு சமைப்பவர்களின் சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதில், அன்னதானம் மற்றும் பிரசாதம், சுகாதாரமான முறையில் சமைத்து, பக்தர்களுக்கு வழங்கப்படுவதை அடுத்து, இக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு, சுகாதார தரமதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதை தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.