ராமரின் ஆயுட்காலமான பதினொரு ஆயிரம் ஆண்டுகள் முடிந்தது. அவர் மீண்டும் தன் இருப்பிடமான வைகுண்டம் திரும்ப ஆயத்தமானார். அயோத்தியில் பாயும் சரயுநதிக்குள் இறங்கிய அவர் தன்னுடன் வந்த அனைவரையும் சேர்த்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது ராமனோடு செல்ல விரும்பாமல் அனுமன் மட்டும் தனித்து நின்றார். ராமர், ‘‘ஆஞ்சநேயா! நீ வரவில்லையா?’’என அழைத்தார். அதற்கு அவர்,‘‘ வைகுண்டத்தில் அமிர்தம், ஆனந்தம், சுகானுபவம் எல்லாம் இருந்தாலும் ராமநாமம் கேட்க வாய்ப்பில்லையே. ராமானந்தம் இல்லாத வைகுண்டத்தை விட பூலோகத்தில் இருப்பதே மேலானது. பூமியில் நிரந்தரமாக தங்கி நலம் தரும் ராமநாமத்தைச் சொல்லப் போகிறேன்’’ என்றார். அதனால் இன்றும் ராமாயண பாராயணம் செய்யும் போது ஒரு பலகையை அனுமனுக்காக வைப்பர். கண்ணுக்குத் தெரியாமல் சூட்சும வடிவில் அவர் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். துாதனாக, வீரனாக, மதியுக மந்திரியாக விளங்கினாலும் ராமரின் திருவடிகளைத் தாங்கி நிற்பதில் தான் அனுமனுக்கு அலாதி மகிழ்ச்சி.