பதிவு செய்த நாள்
30
டிச
2021
04:12
பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அருகிலுள்ள ஜெயந்திமாஜ்ரி பகுதியிலுள்ள குன்றின் மீதுள்ள அம்மன் ஜெயந்திதேவி. 500 ஆண்டுக்கு முன்பு இளவரசி ஒருத்திக்காக இமாச்சல் பிரதேசத்தில் உள்ள காங்கிரா குன்றில் இருந்த அம்மன் இங்கு எழுந்தருளினாள். ஆறு சகோதரிகள் கொண்ட இந்த அம்மனை தரிசித்தால் வாழ்வில் நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர் என்ற உண்மை தெரிய வரும்.
துர்கையின் அருளால் ஆயுதங்களைப் பெற்ற பாண்டவர்கள் பாரதப்போரில் வெற்றி பெற்றனர். இதற்கு நன்றியாக இமாச்சல் பிரதேசத்தில் உள்ள காங்கிரா குன்றின் உச்சியில் கோயில் கட்டினர். ‘கடவுளின் வீடு’ என கருதப்படும் காங்கிரா குன்றின் மீது ஆயிரக்கணக்கில் கோயில்கள் உள்ளன. இவற்றில் பிரபலமான சக்தி பீடங்களான நைனாதேவி, ஜ்வாலாமுகி, பிரஜேஸ்வரி, சிந்தாபூரணி, சாமுண்டா, மானசா, ஜெயந்தி தேவி கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த தெய்வங்களை ஏழு சகோதரிகள் கோயில் எனக் குறிப்பிடுவர். இவர்களில் வெற்றியை தருபவளாக விளங்கும் ‘ஜெயந்திதேவி’ காங்கிரா பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக இருக்கிறாள். இந்த அம்மன் சண்டிகருக்கு அருகிலுள்ள ஜெயந்திமாஜ்ரி பகுதிக்கு எழுந்தருளிய வரலாறு சுவாரஸ்யமானது.
காங்கிரா இளவரசி ஒருத்திக்கும், சண்டிகருக்கு அருகிலுள்ள ஹாத்நாயூர் என்ற பகுதியை ஆட்சி புரிந்த மன்னரின் சகோதரருக்கும் திருமணம் நடந்தது. ஜெயந்தி தேவியின் தீவிர பக்தையான இளவரசி, மணமான பின்னர் அம்மனை தரிசிக்க முடியாதே என வருந்தியபடியே மணமகன் வீட்டாருடன் ஊருக்குப் புறப்பட்டாள். பல்லக்கில் அமர்ந்த இளவரசியை பணியாளர்கள் துாக்கிக் கொண்டு நடந்தனர். சிறிது துாரம் சென்றதும் அதன் பாரம் அதிகரித்தது. பணியாளர்கள் பல்லக்கை கீழே வைத்தனர். அப்போது இளவரசி, ‘‘ஜெயந்தி தேவியை என்னுடன் வருமாறு பிரார்த்தனை செய்தேன். அம்மனின் திருவிளையாடலால் தான் பல்லக்கு கனக்கிறது’’ என்றாள். உடனடியாக ஜெயந்திதேவிக்கு பூஜை நடத்தும் பூஜாரி அங்கு அழைத்து வரப்பட்டார். ஜெயந்திதேவியை ஒரு கல்லில் ஆவாஹனம் செய்த பூஜாரி, அதை ஒரு பல்லக்கில் ஏற்றினர். அதை இளவரசி பல்லக்கும் பின்தொடர மணமகன் வீட்டை அடைந்தனர்.
விஷயம் அறிந்த ஹாத்நாயூர் மன்னர் தன் நாட்டு எல்லைக்குள் ஜெயந்திமாஜ்ரி குன்றைத் தேர்வு செய்து, அம்மனை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். பூஜாரி, அவரது குடும்பமும் அங்கு நிரந்தரமாக தங்கினர்.
காங்கரா இளவரசியும் தன் இஷ்ட தெய்வமான ஜெயந்திதேவியை அடிக்கடி தரிசித்து மகிழ்ந்தாள். காங்கிரா இளவரசியின் பரம்பரையினர் இக்கோயிலை இன்றும் வணங்குகின்றனர். பூஜாரியின் 11வது தலைமுறையினர் தற்போது கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிகின்றனர்.
குன்றின் மீது 100 படிகளில் ஏறினால் கோயிலை அடையலாம். வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. பளபளப்பான துணிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை பளிங்கு கல்லால் ஆன அம்மன் கருவறையில் காட்சி தருகிறாள். சிவன், கணேஷ், லட்சுமி, லோக்தா வேி, பால சுந்தரி சன்னதிகள் இங்கு உள்ளன. மாசிபவுர்ணமியன்று மெகாமேளா நடக்கிறது. நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தமானது. கோயிலை ஒட்டி பக்தர்களை கவரும் விதத்தில் பூங்கா, அருங்காட்சியகம் உள்ளது.
எப்படி செல்வது
சண்டிகரில் இருந்து 15 கி.மீ.,