ராமேஸ்வரம் கோயில் தீர்த்தம், பிரசாதம் நோ : பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2021 10:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கோடி தீர்த்தம், பிரசாதம் விற்பனை நிறுத்தியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் 22 வது கோடி தீர்த்தம் அனைத்து தீர்த்தங்களையும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் கோடி தீர்த்தத்தை பாட்டிலில் விற்கின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக கோடி தீர்த்தம் பாட்டிலில் அடைக்க, லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க கோயில் நிர்வாகம் கவனம் செலுத்தாததால், விற்பனையும் டல்லாகியது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் பிரசாதம், கோடி தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி பொதுசெயலாளர் ராமமூர்த்தி கூறுகையில் : கோயிலில் தரிசனம் செய்த பின் பக்தர்கள் கோடி தீர்த்தம், பிரசாதங்கள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கோயில் நிர்வாகம் தீர்த்தத்தை பாட்டிலில் அடைக்க, பிரசாதங்கள் தயாரிக்க கூடுதலாக ஊழியர்கள் நியமிக்காமல் அலட்சியமாக உள்ளதால் பக்தர்கள் மனவேதனையுடன் திரும்பி செல்கின்றனர். இது ஆன்மிக மரபை மீறிய செயலாகும். பக்தர்களுக்கு தடையின்றி துரிதமாக பிரசாதம், தீர்த்தம் விற்காவிடில் ஒரிரு நாளில் போராட்டம் நடக்கும் என்றார்.