பதிவு செய்த நாள்
03
ஜன
2022
04:01
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இங்கு ஒரே கல்லால் உருவான, 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக கரம் கூப்பி நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கும். நடப்பு ஆண்டின் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து ஏழாம் ஆண்டாக, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சுவாமிக்கு சாத்தப்பட்டது. மதியம், 1:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முன்னதாக, கோவில் முழுதும் 2 டன் சாமந்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விரைவாக சுவாமியை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, 250, 20 ரூபாய் கட்டணத்திலும், இலவசமாக தரிசனம் செய்ய ஒரு வழியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு, 500 பேர் வீதம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தன் மனைவியுடன் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோரும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வடை வழங்கப்பட்டது.