நம் எதிர்கால வாழ்க்கை அறிய ஜோதிடம் வழிகாட்டுகிறது. ஒருவரின் ஜாதகத்தை கணித்து பலன்களை நவகிரகங்களின் இருப்பிடத்தைக் கொண்டே கூறுவர். இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என்று வாழ்வின் அனைத்து நிலைகளிலும் கிரகங்களின் பெயர்ச்சிகளாலேயே ஒருவருக்கு ஏற்படுகின்றன. இந்த நவகிரகங்கள் ஒன்பதிலும் தலைவராகத் திகழ்பவர் சூரியனே. சூரியனை நட்சத்திரங்களில் ஒன்று என்று அறிவியல் கூறுகிறது. ஆனால், ஜோதிடத்தில் சூரியன் கிரகமாகக் குறிக்கப்படுகிறார். ராசிகளில் சிம்மத்தின் அதிபதியாக இருக்கும் சூரியன், மேஷராசியில் செல்லும் போது உச்சபலத்தை பெறுகிறார். இக்கால கட்டத்தையே ‘அக்னி நட்சத்திரம்’ என்று குறிப்பிடுவர். சூரியனின் நிலையை வைத்தே ஒருவரின் உடல்நலம், ஆன்ம பலம், ஆன்மிக யோகத்தை அறிய முடியும். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனுக்கு நெருங்கிய நண்பர்களாவர். இக்கிரகங்களை சூரியன் பார்த்தாலோ, சேர்ந்திருந்தாலோ வாழ்வில் நற்பலன் உண்டாகும்.