பதிவு செய்த நாள்
18
ஜன
2022
05:01
திருநெல்வேலி : உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடத்தக்கோரி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து, இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமமான உவரியில் உள்ள, சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச விழா பிரசித்தி பெற்றது. ஜன., 10ல் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று தேரோட்டமும், நாளை தெப்ப உற்சவமும் நடக்க இருந்தன. கொரோனா மூனாவது அலையால் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. தேரோட்டம் நடத்தக் கோரி பா.ஜ., மாநில துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ., காந்தி உட்பட அக்கட்சியினர் நேற்று காலை கோவில் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாலையில் அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில், இன்று காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடத்தப்படும். கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என முடிவு செய்யப்பட்டது. திருச்செந்துார் கோவில் வளாகத்திற்குள், இன்று நடக்கும் தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தைப்பூச விழா, வழக்கமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் தைப்பூச மண்டபத்தில் நடக்கும். இந்த ஆண்டு கோவில் உள்தெப்பத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.