மார் 27ல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2022 03:01
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் 27ம் தேதி நடைபெறும்- தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதும் தேவார பாடல் பெற்றதும், அபிராமி பட்டர் வாழ்க்கையில் அமாவாசை பவுர்ணமி ஆக்கிய புராண நிகழ்வு நடைபெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஒரு ஆண்டாக திருப்பணிகள் பழமை மாறாமல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று திருக்கடையூரில் கும்பாபிஷேக பணிகள் குறித்து தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் பற்றி பேசிய தருமபுரம் ஆதீன குருமகாசன்னிதானம், மார்ச் மாதம் 27 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ரிஷப லக்கினத்தில் காலை 10 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும், பக்தர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றியே திரளாக பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார். பேட்டியின் போது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.