கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் உலகில் பல உள்ளன. உதாரணமாக மின்சாரத்தை பார்க்க முடியாது. ஆனால் தொட்டால் ஷாக்கும் அடிக்கும். அதை உணரவும் முடியும். அதே சமயம் டிவி ரிமோட்டில் உள்ள அகச்சிவப்பு கதிர்களை பார்க்கவோ, உணரவோ முடியாது. ஆனால் அது இருப்பது உண்மை, செயல்படுவதும் உண்மை. அதைப் போலத் தான் முன்னோரின் ஆசிகளும், செயல்பாடுகளும். ஆனால் அதை சில சமயம் உணர முடியும். நமக்கு ஆபத்து நேராமல் அவர்கள் காத்து வருகின்றனர்.
உதாரணமாக டூவீலரில் அமர்ந்ததும், ெஹல்மெட்டை எடுக்க மறந்தது ஞாபகம் வரும். உடனே வண்டியை சைடு ஸ்டாண்டில் விட்டு விட்டு செல்வோம். ஆனால் சில சமயம் வண்டி கீழே விழும். புலம்பியபடியே வண்டியில் கிளம்புவோம். அதே போல வண்டியில் செல்லும் போது திடீரென மணல் சறுக்கி வாரி விட்டு சிறு காயத்துடன் தப்பிப்போம். இது எல்லாம் முன்னோர் நம்மை காக்கும் நடவடிக்கைகள் தான். நாம் வண்டியில் விழுந்து காயப்பட வேண்டும் என்பது விதி. அதை மாற்ற முடியாது. ஆனால் பாதிப்பு நேராமல் சூட்சும வடிவில் முன்னோர் நம்மை வழிநடத்துவதே இதற்கு காரணம். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தால் ஊழ்வினை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது நம் கடமை. முடியாவிட்டால் ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகளில் செய்வது முக்கியம். இந்த நாட்களில் செய்யும் தர்ப்பணம் பலம் வாய்ந்தது. எனவே தை அமாவாசையன்று தர்ப்பணம் செய்து நம்மையும், சந்ததிகளையும் காப்போம். - எஸ்.சந்திரசேகர்