பதிவு செய்த நாள்
31
ஜன
2022
09:01
விருத்தாசலம், : விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு, கோபுரங்கள், சாலைகள் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது.
இதற்காக பிரமாண்ட யாக சாலையும், கும்பாபிஷேக புனிதநீரை சுமந்து வர 5 யானைகள், விமான கலசங்களில் மலர்கள் துாவ சிறப்பு ெஹலிகாப்டரும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்கள், கோட்டை மதில் சுவர்களில் மின் விளக்குகளும், நான்கு மாட வீதிகளில் சுவாமிகள் உருவங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், பாலக்கரை ஆற்றுபாலம் ஆகியவற்றில் அலங்கார தோரண வடிவில் மினி பல்புகள் தொங்கவிடப்பட்டுள்ளன. மாலை 6:00 மணிக்கு மேல், நகரமே மின்விளக்குகளில் ஜொலிக்கிறது. கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 27ம் தேதி, சுவாமியிடம் உத்தரவு பெரும் நிகழ்ச்சியாக பெரியநாயகர் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது.
இன்று காலை 9:00 மணிக்கு மேல், சாந்தி ேஹாமம், கிராம சாந்தி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு மேல், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அய்யனார் விசேஷ பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழா பணிகளை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று பார்வையிட்டு பாராட்டினார். கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர் சந்த், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ் சந்த், மூத்த வழக்கறிஞர் பாலச்சந்தர், காங்., நிர்வாகிகள் ராஜன், ரஞ்சித்குமார், ராஜா, சுபமணிகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர்.