பதிவு செய்த நாள்
31
ஜன
2022
06:01
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், தேர் திருவிழாவை நடத்த கோரி, ஸ்தலத்தார் மற்றும் மிராஸ்தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு மாசிமகத் தேர் திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெறும். இதில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். தேர்த்திருவிழா மறுநாள் நடைபெறும் பந்த சேவை, தண்ணீர் சேவைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் வேண்டுதலையும், நேர்த்திக்கடனையும் நிறைவேற்றி வருவர்.
இந்நிலையில் கொரோனா பிரச்னையால், இந்த ஆண்டு, தேர்த்திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, நேற்று அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார், ஊர்க்கவுடர், மிராசுதாரர்கள், இந்து முன்னணியினர், அனைத்து சமுதாயத்தினர் ஆகியோர் பங்கேற்ற கூட்டம், காரமடை ராமானுஜர் கூடத்தில் நடந்தது. இதில், இந்த ஆண்டு மாசிமக தேர்த் திருவிழாவை, அரசு உத்தரவுபடி முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை விட்டு, நடத்துவதற்கான ஆவண செய்ய வேண்டுமாய், ஊர் பொதுமக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றிய கோரிக்கை மனுவை, அரங்கநாதர் கோவில் செயல் அலுவர் லோகநாதனிடம் கொடுத்தனர்.