ராமேஸ்வரம் : தை அமாவாசையை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பக்தர்கள் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினர்.பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். கொரோனா கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மதியம் கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்தம்வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.