ரிசர்வ் வங்கியில் பணிபுரிபவர் வைத்தியநாதன். தன் சகோதரியுடன் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவரது சகோதரியிடம் ‘‘பெற்றோரிடம் சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ’’ என்றார் மஹாபெரியவர். அவள் பெற்றோரிடம் தெரிவிக்க, ‘‘அதற்கென்ன அவசரம்?’’ என கோபித்தனர். பெரியவரை தரிசிக்க காஞ்சிபுரம் உடனே புறப்பட்டனர். ‘‘ உங்களின் மகளுக்கு உடனே திருமணம் செய்யுங்கள்’’ என மீண்டும் பெரியவர் சொல்ல திருமணத்தை நடத்தினர். அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு மெல்ல மெல்ல மாந்திரீக உபாதைகள் ஏற்படத் தொடங்கின. உடம்பை இரும்புக் கம்பியால் கட்டுவது போலவும், ஆணியால் அடிப்பது போலவும் உணரத் தொடங்கினாள். மேலிருந்து கற்கள் விழுவது, உண்ண எடுக்கும் உணவு மலமாவது போன்ற பீதிகள் உண்டாயின. திருமணத்திற்கு அளித்த 150 சவரன் நகைகள் மாயமாகின. பயத்துடன் பெரியவரைச் சந்தித்து அவர்கள் முறையிட்டனர். தான் அணிந்திருந்த காவித்துணியில் சிறிது கிழித்துக் கொடுத்து அதை அவளது மாங்கல்யத்துடன் கட்டும்படி பெரியவர் உத்தரவிட தாலி மட்டும் தப்பியது. ஒவ்வொரு நாளும் பீதியுடன் நகர்வதைக் கண்ட பெற்றோர் மனம் நொந்தனர். காஞ்சிபுரம் வந்து அழுது முறையிட்ட போது, ஆனந்த தாண்டவபுரத்தில் உள்ள உபாசகர் ஒருவரிடம் போகச் சொல்லி உத்தரவிட்டார். அங்கு சென்றும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் ஒரு நம்பூதிரியிடம் செல்லுமாறு கூற, அவர் ஏவியவர் மீதே திருப்பி விடுவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு மஹாபெரியவர் மறுப்பு தெரிவித்தார். பின்னர் அரியலுாரைச் சேர்ந்த ஒரு உபாசகியிடம் செல்லுமாறு பெரியவர் உத்தரவிட்டார். அங்கு, ‘இது உறவினர்கள் செய்த செய்வினை தான்’ என்பது தெரிய வந்தது. இப்படி துன்பங்களை அனுபவிக்கும் அப்பெண்ணோ பெண்ணிற்குரிய தன்மையை இழக்க ஆரம்பித்தார். பெரியவரின் முன்னிலையில் இருக்கும் வரை பிரச்னை ஏதும் இருக்காது. அங்கிருந்து நகர்ந்தால் நரக வேதனை தான். முற்பிறவிப்பயனை ஒருவர் வாழ்வில் அனுபவித்து கழித்தாக வேண்டும் என்றாலும் கருணாமூர்த்தியான பெரியவரோ பெரும்பங்கை தான் தாங்கிக் கொண்டு வினைப்பயனை முடிந்தளவு குறைக்கவும் செய்தார். ஒருநாள் அவளுக்கு விடிவு காலம் பிறந்தது....நடமாடும் தெய்வமான காஞ்சி மஹாபெரியவர் ஒரு பாதத்தை கீழே ஊன்றி நின்று கொண்டு, தன் மற்றொரு பாதத்தால் அவளது தலையை தீண்டினார். அருணகிரிநாதர் சொல்வது போல, ‘‘அவன் கால் பட்டழிந்தது இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே’’ என்பது போல அதிசயம் நடந்தது. பிறகு என்ன... அவள் பட்ட துன்பங்கள் எல்லாம் அன்றோடு மறைந்தன. கர்மவினைகளின் பயனை பிரம்ம ஞானியான மஹாபெரியவர் அல்லாமல் வேறு யாரால் இப்படி தீர்க்க முடியும்... இது போல மற்றொரு சம்பவம் ஒன்றும் நடந்தது. மடத்தில் கைங்கர்யம் செய்த சீடர் ஒருவரின் தங்கைக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் போனது. எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியவில்லை. மஹாபெரியவரிடம் அந்த சீடர் முறையிட்ட போது, ‘‘நான் மந்திரவாதின்னு உனக்கு தெரியாதோ’’ என்று கேட்க, பெரியவர் ஏதோ பரிகாசம் செய்வதாக எண்ணிக் கொண்டார். மறுநாள் மடத்தில் நடக்கவிருக்கும் சந்திரமவுலீஸ்வரர் பூஜைக்கு தங்கையை அழைத்து வருமாறு பெரியவர் உத்தரவிட்டார். ‘‘ நாளை நடக்கவிருக்கும் பூஜையில் சுவாமிக்கு சாத்திய சந்தனத்தை எடுத்து நான் வீசுவேன். தன் மீது பட்டதும் ஆக்ரோஷத்துடன் உன் தங்கை இங்கிருந்து வெளியே ஓடுவாள். இரண்டு அல்லது மூன்று பேர் அவளைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். வெளியேறிய அவள் ஆற்றில் போய் குதிப்பாள். மடத்திற்கு மீண்டும் அழைத்து வாருங்கள்’’ என்று உத்தரவிட்டார். மறுநாள் பெரியவர் சொன்னபடியே நடந்தது. முன்வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த அப்பெண்ணின் மீது பெரியவர் சந்தனத்தை வீசினார். ஆக்ரோஷத்துடன் ஓடிய அவளை ஆண்கள் பின்தொடர்வதற்குள் வழியில் ஒரு மரத்தின் மீது மோத அதன் கிளை முறிந்தது. கடைசியில் ஆற்றில் அவள் குதிக்க, பின்தொடந்தவர்கள் காப்பாற்றி மடத்திற்கு துாக்கி வந்தனர். கருணாமூர்த்தியான மஹாபெரியவர் சந்திர மவுலீஸ்வரர் அபிேஷக தீர்த்தத்தை தெளிக்கச் சொன்னதோடு, அவள் உட்கொள்ளவும் கட்டளையிட்டார். அப்படி செய்ததும் துாங்கி எழுவது போல கண் விழித்தாள். அவ்வளவு தான் அவளது கர்மவினை அத்துடன் மறைந்தது. பின்னர் திருமணமாகி இரு குழந்தைக்கு தாயாகி இல்லறம் நடத்தினாள் அவள்.... காஞ்சி முனிவரின் தவவலிமையைத் தான் என்னவென்று சொல்வது? விதியையும் மாற்ற வல்ல தவ மலை அவரே. அவரின் அருளைப் பெற, நாமும் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும்.