பதிவு செய்த நாள்
02
பிப்
2022
05:02
ஆதி மனிதர்களின் வளர்ச்சி பற்றி அகத்திய முனிவர் தமது வாத செளமியம் 1200 என்ற நுாலின் பாடல்கள் 130, 131ல் விளக்கியுள்ளார்.
‘‘உலகில் தோற்றுவிக்கப் பெற்ற மனித இனம், ஒரு கோடி ஆண்டுகள் வரையில் இளமை, மூப்பு, சாவு இன்றி வாழ்ந்து வருவதைக் கண்ட சிவபெருமான் உமாதேவியிடம் நம்மை வணங்குமாறு அருள் செய் என்று கூறினார். இதைக்கேட்ட உமாதேவி ஒரே மனதாக சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்ததும் மண்ணில் பயிர்கள் உண்டாகுமாறு தாவரங்களின் விதைகள் தோன்றின. உடனே திருமால் மேகத்தால் மழை உண்டாக்கவே எல்லா விதைகளும் பூமியில் பதிந்து முளைத்தன.’’
‘‘செந்நெல் முதலான பதினெட்டு வகையான தானியங்களும் அப்போதே உண்டாயின. காய், கனி, அன்னம் ஆகியவற்றின் அறுசுவையைக் கண்ட மக்களுக்கு ஆசை அதிகமாயிற்று. அதனால் சுவாசம் முன்னும் பின்னுமாக ஓடலாயிற்று. உலகமெல்லாம் ஒரே கலக்கமாயிற்று.
செய்யென்று சொன்னமொழி உமையும் கேட்டு
சிந்தைமன தொன்றாகச் சிவனை நோக்கி
மெய்யென்று வித்துவகைத் தானுண்டாக்கி
மையென்ற திருமால்தான் மேகந் தன்னை
மார்க்கமுடன் நினைக்கையிலே மைந்தா கேளு
பையென்ற முகிலதனால் அமிர்தம் உண்டாய்ப்
பார்தனிலே சகல வித்தும் பதிவ தாச்சே
ஆச்சப்பா செந்நெல்பதினெட்டு வித்து
அப்போதே உண்டாச்சு அதன்நெல் மைந்தா
நீச்சப்பா அன்னம்அறு சுவையைக் கண்டு
நிசமான மனுநீதி நேர்மையாக
பேச்சப்பா சகல சித்தும் தானுண்டாச்சு
பெருகுகின்ற ஆசைவெகு நேசமாச்சு
மூச்சப்பா வாசியது முன்பின்னாச்சு
முழங்கி நின்ற சகமதுவும் கலக்க மாச்சே.
இப்பொருள் பற்றி அகத்தியர் தொடர்ந்து பாடல்கள் 132, 133ல் இவ்வாறு கூறியுள்ளார். கலங்கி நின்ற உலகுக்கு உறுதி ஏற்படுத்த திருமால் எட்டும் இரண்டும் (பரிபாைஷ) ஒன்றாய்க் கூட்டியும், நமசிவய என்ற ஐந்தெழுத்துக்களால் வேதமாக்கியும், மனிதர்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் (உபாயம் அறிந்தோர்) என்று நான்கு பிரிவுகளாக்கி கட்டுப்பாட்டோடு வாழ வழிவகுத்தார். நாகமுனி என்பவர் உலக மக்களுக்காகப் பதினெட்டு பாைஷகளை உருவாக்கினார். ராஜமுனிவர் என்பவர் தர்க்க சாஸ்திரம், வேதாந்தம், சிற்ப சாஸ்திரம், மதன சாஸ்திரங்களை உருவாக்கினார். மனித இனம் அறுசுவை உணவை உண்டு நீரைப் பருகியதால் மோகம் உண்டாகி, ஆண், பெண் சேர்க்கை ஏற்பட்டது. அதனால் மனிதர்களுக்கு நன்மை, தீமை வகுக்கப்பெற்றது.
கலங்கிநின்ற லோகமதற் குறுதியாக
கருணையுள்ள விஷ்ணுமுனி கருத்தை வைத்து
இலங்கிநின்ற எட்டிரண்டும் ஒன்றாய்க் கட்டி
ஏகமென்ற ஐந்தெழுத்தால் வேதமாக்கி
துலங்கிநின்ற மனுவையொரு நான்கு சாதிச்
சுத்தமுடன் தான் வகுத்து சுகமாய் மைந்தா
விளங்கி நின்ற சத்திரிய அங்கிசத்தில்
விபரமுள்ள நாகமுனி விபரம் கேளே
கேளடா நாகமுனி உலகுக் கையா
கிருபையுடன் பாைஷ பதினெட்டும் சொன்னார்
வாளடா ராஜமுனி தர்க்க சாத்திரம்
மகத்தான வேதாந்த சிற்ப சாத்திரம்
காலடா தானறிய மதன சாத்திரம்
கலந்தமனு மோகமதால் நன்மை தின்மை
பாளடா அறுசுவையும் அமிர்தம் காட்டி
வங்கமுடன் அன்னமதால் சார்ந்தார் தானே
குறிப்பு: பதினெட்டு பாைஷகள்: 1. அங்கம் 2. அருணம் 3. கலிங்கம் 4. கவுசிகம் 5. காம்போஜம் 6. கொங்கணம் 7. கோசலம் 8. சாவகம் 9. சிங்களம் 10. சிந்து 11. சீனம் 12. சோனகம் 13. திராவிடம் 14. துளுவம் 15. பப்பரம் 16. மகதம் 17. மராட்டம் 18. வங்கம்
மனிதனின் வளர்ச்சியைப் பற்றி, அகத்தியர் தம் வாதசெளமியம் 1200ல் பாடல் 134 ல் குறிப்பிட்டுள்ள முக்கிய செய்திகள்: மனிதர்கள் உணவு உண்டதால் உறக்கம் உண்டாயிற்று. காலப்போக்கில் இளமை, மூப்பு, ஆசை, வஞ்சகம், பிறப்பு, இறப்பு, கோயில், நதிகள், அனைத்தும் உண்டாயின. பின்னர் அரசன், ஆட்சிமுறை ஏற்பட்டது. அலங்காரம் செய்து கொள்வது, நல்ல நாள், முகூர்த்தம் பார்ப்பது ஆகிய அனைத்தும் ஏற்பட்டன.
தானென்ற அன்னமதால் நித்திரை உண்டாய்
சங்கையுடன் அனுபோகம் மூப்பு இளமை
வானென்ற வேகமுடன் ஆசை உண்டாய்
வஞ்சகமும் பிறப்பு இறப்புத் தானும் உண்டாய்
தேனென்ற பலகோவில் நதிகளுண்டாய்
செகராஜ மகுடபதிவர்க்கம் உண்டாய்
கோனென்ற ஒப்பனைகள் நன்றாய்ச் செய்து
குறிப்புடனே நாள் முகூர்த்தம் செய்தார் பாரே
இறுதியாக அகத்தியர் மனித குலத்திற்கு இப்படி அறிவுரை கூறுகிறார்.
பாரப்பா பல நினைவை நிறுத்தி மைந்தா
பத்தியுடன் ஒருமுகமாய்ப் பவன்கைக் கொண்டால்
நேரப்பா தன்மயமே சாட்சியாகும்
நிசமான விண்மயமே சோதியாகும்
காரப்பா விண்மயத்தில் மணக்கண் வைத்து
கருணைவளர் சிவமயமாய் கடாட்சம் பெற்றால்
ஆரப்பா உனக்குநிகர் ஆருமில்லை
அப்பனே செகசால வித்தை கேளே.
அகத்தியர் வாத செளமியம் 1200ல் பாடல் 706 ன் பொருளாவது: மகனே! மனம் பலவாறாக ஓடுவதை நிறுத்தி, சூக்கும சரீரத்தில் ஒருமுகமாக நின்று தவம் செய்தால் உன் சூக்கும சரீரமே சாட்சியாகி, உன்னுடைய உயிரின் சொரூபமான பரப்பிரம்ம சோதி தோற்றமாகும். நீ அந்த சோதியில் மனக்கண்ணை வைத்துத் தவம் செய்தால் சூக்கும சரீரத்தை உயிரின் சொரூபத்தோடு ஐக்கியப்படுத்தி முக்தி அடையலாம். அந்நிலையை அடைந்தால் உனக்கு நிகர் யாருமில்லை.
பா.கமலக்கண்ணன்