சிவகங்கை நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயில் முன் ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாயன்று பொங்கல் விழா நடைபெறும். நேற்று செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது. ஜன.,19 அன்று காலை 9:45 மணிக்கு குடவோலை முறைப்படி வெள்ளி பானையில் 923 (புள்ளிகள்) குடும்ப தலைவர்களின் பெயர்களை சீட்டு எழுதி போட்டனர். அதில் முதல் சீட்டில் வரும் பெயரின் (எஸ்.எம்., நாராயணன்) குடும்பத்தார் நேற்று மாலை 5:05 மணிக்கு முதல் பானையில் (மண் பானை) பொங்கல் வைத்தனர். இந்த பானையில் அனைவரும் பால் ஊற்றி துவக்கி வைத்தனர். அதை தொடர்ந்து 923 பானைகளில் (வெண் பொங்கல்) நகரத்தார் பொங்கல் வைத்தனர். அவர்களை தொடர்ந்து பிற சமூகத்தினர் 90 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
நேற்று இரவு 7:00 மணிக்கு கண்ணுடைய நாயகி தங்க ரத புறப்பாடு நடந்தது. இரவு கிடாவெட்டி அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர். பின்னர் பொங்கல் பானைகளை ஊர்வலமாக எடுத்து வீடுகளுக்கு கொண்டு சென்றனர். கோயில் கண்காணிப்பாளர் கணபதி ராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் நகரத்தார்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர். வரன் பார்க்கும் படலம் சென்னை ஜெ.எஸ்., பாரதி கூறியதாவது : நாட்டரசன்கோட்டையை பூர்வீகமாக கொண்ட நகரத்தார் வணிகம், வேலை காரணமாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கின்றோம். செவ்வாய் பொங்கல் விழாவிற்கு எந்த நாட்டில் இருந்தாலும் நாட்டரசன்கோட்டை வந்துவிடுவோம். அன்று வரன் பார்க்கும் படலமும் நடத்தப்படும். ஆண், பெண் இருவருக்கும் பிடித்த பின் பெரியவர்கள் பேசி திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இந்நடைமுறை பாரம்பரியமாக கடைபிடிக்கிறோம் என்றார். சிவகங்கை அருகே பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் முன் நேற்று மாலை 4:32 மணிக்கு நகரத்தார் பொங்கல் வைத்தனர். இதற்காக ஜன., 18 அன்று குடத்தில் குடும்ப தலைவர்களின் (புள்ளிகள்) பெயர்களை எழுதி போட்டு சீட்டு எடுத்தனர். அதில் முதல் சீட்டாக பி.என்.எஸ்., பழனியப்பன் குடும்பத்தினர் பெயர் வந்ததால், அவர்களே முதல் பானையிலும், அதனை தொடர்ந்து 497 பானைகளில் பொங்கல் வைத்தனர். இரவு 7:00 மணிக்கு புல்வநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.