பதிவு செய்த நாள்
06
பிப்
2022
03:02
மயிலாடுதுறை: சமய மரபுகளில் தலையிடுவதை திராவிடர் கழகம் கைவிட வேண்டும் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பட்டணப் பிரவேசம் உள்ளிட்ட சமய மரபுகளில் தலையிடுவதை திராவிடர் கழகம் கைவிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின்; மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது:
பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானமாக அருளாட்சி புரிந்துவரும் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டணப்பிரவேசம் வருகிற பிப்ரவரி 07-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அறிகிறோம். திகவினரின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. திருவாவடுதுறை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜை விழாவும், அதனையொட்டி பக்தர்கள் மற்றும் மடத்தின் சிஷ்யர்கள் சந்நிதானங்களை பல்லக்கில் அமர வைத்து வீதி உலாவாக கொண்டு செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்வும் பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் மரபாகும். முன்னுக்குப்பின் முரணாக பேசுவதும், இந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசுவதையுமே திராவிடர் கழகம் வழக்கமாக வைத்துள்ளது. தருமையாதீன குருமகா சந்நிதானங்கள் மற்றும் சூரியனார்கோயில் குருமகா சந்நிதானங்களின் பட்டணப் பிரவேச நிகழ்வுகள் சமீபத்தில் நல்லவிதமாக நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பட்டணப் பிரவேச நிகழ்வு திருவாவடுதுறையில் நடைபெற உள்ளது.
பக்தர்கள் தங்களது சுயவிருப்பத்தின்படியே பல்லக்கினை சுமக்கின்றனர். கணவன் - மனைவி உறவு எப்படி உயர்வானதோ அதுபோல குரு - சிஷ்ய உணர்வும் பக்தி பூர்வமானது, புனிதமானது. குருமகா சந்நிதானங்கள் பல்லக்கில் எழுந்தருள்வது குறித்து ஈ.வெ.ராமசாமி நாயக்கரிடம் புகாராக கூறியபோது "தமிழன் பல்லக்கில் வர வேண்டும் என்பதற்காகத்தானே நாம் பாடுபடுகிறோம்" என்று சொன்னதாக சொல்லப்படுவதுண்டு. ஆண்டான் - அடிமை, மனிதனை மனிதனே சுமப்பதா, மனித உரிமை என்றெல்லாம் சொல்லி சமய மரபுகளில், உள்விஷயங்களில் தலையிடுவது தவறானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25, 26 ஆகியவை சமய மரபுகளை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை கடைப்பிடிக்க முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ஆகவே, திருவாவடுதுறை ஆதீனம் பட்டணப்பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய உள்விஷயங்களில் தலையிடுவதை திராவிடர் கழகத்தினர் கைவிட வேண்டும். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு சமய மரபுகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.