ஹிந்து கோவில்கள் சூறையாடல்; கனடாவில் நீடிக்கும் பதற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2022 10:02
டொரோன்டா : கனடாவில், ஹிந்து கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மன் கோவில், சிவன் கோவில், ஜெகன்நாதர் கோவில் என அடுத்தடுத்து பல கோவில்கள் சூறையாடப்பட்டன. கடந்த 30ம் தேதி மிசிசவுகா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கலாசார மையத்திற்குள் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். உள்ளே இருந்த நன்கொடை உண்டியல்களை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்த அவர்கள், அந்த மையத்தையும் சூறையாடினர். அந்த பகுதியில் உள்ள கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முகமூடி அணிந்து இருப்பதால் மர்ம நபர்களின் அடையாளங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கோவில்கள் சூறையாடப்பட்டு வருவதால், நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அர்ச்சகர்களும், பக்தர்களும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கனடா நாட்டில் உள்ள ஹிந்து கோவில்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வலுக்கும் போராட்டம்: கனடாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தகட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க, பிரதான இடங்களில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.