பதிவு செய்த நாள்
07
பிப்
2022
09:02
சூலூர்: சூலூர் சிவன் கோவிலில் திருப்பணிகள் துவங்கியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், சின்னக்குளத்தை ஒட்டி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், 1000 ஆண்டுகள் பழமையானது. வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி, சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலானதால், கோபுரத்தில் வண்ணங்கள் பொலிவு இழந்தன. முன் மண்டபம், பிரகாரத்தில் உள்ள தளங்கள், சுற்றுச்சுவர் ஆகியன சேதமடைந்து இருந்தன. சுற்றுவட்டார பக்தர்கள், கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திருப்பணிக்காக, ரூ. 28 லட்சத்தை அரசு ஒதுக்கியது. இதையடுத்து, நேற்று காலை பாலாலய பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர். திருப்பணிகள் முடியும் வரை கோவில் வளாகத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள இளங்கோவிலில் தினசரி பூஜைகள் நடக்க உள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு, கோவிலின் திருப்பணிகள் துவங்கியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.