பதிவு செய்த நாள்
11
பிப்
2022
01:02
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், வரலாற்று மாணவர்கள் செல்வகணேஷ், சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர்
திருச்சுழி அருகே, சென்னிலை குடியில், கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, முற்கால பாண்டியர் கால மடை கல்வெட்டை கண்டறிந்தனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, "குளம், கண்மாய்களில் சேமிக்கப்படும் நீரை தேவையின்றி வீணாக்காமல், தடுத்து, பாசன வசதி யின் பயன்பாட்டிற்கு ஏதுவாக அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். இதுபோன்ற மடை அமைப்பு திருச்சுழி அருகிலுள்ள சென்னிலை குடி கண்மாயில் கண்டறியப்பட்டது. இம் மடையை சார்ந்த, நீர்மட்ட அளவு கல்லானது அத்தூணின் மேல் பகுதியில், 10 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட அழகிய வடிவமைப்புடன் காணப்படுகிறது. அதில், கிடைமட்டமாக உள்ள குறுக்கு கல்ளில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு கல்வெட்டுகளின் காலம் கிபி ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது என கருதப்படுகிறது. ஸ்ரீ என்ற மங்கல எழுத்துடன் தொடங்கி, மனமே துணை என்ற வார்த்தையுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் உள்ள மடைகளை பொறுத்தவரையில், மடை அமைத்தவர் பெயர், அரசர், ஆட்சி, ஆண்டு ஆகியன இடம் பெற்றிருக்கும்.
ஆனால், இந்த மடைகளில், இது போன்ற குறிப்புகள் ஏதும் இல்லாமல், மனமே துணை என்று மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மனம் இருந்தால், மார்க்கம் உண்டு என்ற வரியை உணர்த்துவதாக அமைகிறது. தமிழ்நாட்டில், கண்டறியப்பட்டுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளில், இது சற்று வித்தியாசமானது. கல்வெட்டில், திருச்சுழி என்ற பகுதியானது பருத்தி குடி நாட்டு தேவதானம் என்று அழைக்கப்படுகிறது. திருச்சுழி வட்டாரத்தில் சென்னிலைகுடியில் கண்டறியப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டும், திருச்சுழியில் உள்ள சிவன் கோயிலில் காணப்படும் வட்டெழுத்து கல்வெட்டும் மற்றும் அதே
பகுதியை சேர்ந்த பள்ளி மடத்தில் உள்ள சிவன் கோவிலில் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டு ஆகியன பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிலையில் உள்ளதால், இப்பகுதியில் முற்காலப் பாண்டியர் ஆட்சி சிறந்து இருப்பதனை உணர்த்தும் வகையில் இருக்கிறது.