மதுரை:தமிழகத்தில் அறநிலையத்துறை கோவில்களில் செயல்படுத்தப்படும், அன்னதான திட்டத்தில் ஒரு நபருக்கான உணவு செலவு 25 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட, கோவில் அன்னதான திட்டத்தில், பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி அடிப்படையில் ஒரு நபருக்கு, 25 ரூபாய் என நிர்ணயித்து அரசு நிதி ஒதுக்கியது.இத்திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், விலைவாசி உயர்வு அடிப்படையில், ஒரு நபருக்கு 25 ரூபாய் என்பதை 35 ரூபாயாக உயர்த்தி அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். தினமும் அதிகபட்சம் 100 பேருக்கு அன்னதானம்வழங்க 3,500 ரூபாய் செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய மளிகை பொருட்கள், காய்கறிகள், காஸ், தயிர் உட்பட 32 விதமான பொருட்களை, என்னென்ன அளவுகளில், எவ்வளவு விலைக்குள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.