அரிவாட்டாய நாயனார் தினமும் சிவபெருமானுக்கு செந்நெல் , மாவடு , செங்கீரை நிவேதனமாக பூஜை செய்து வந்தவர். வறுமை வந்த போதும் தனது தொண்டினை விடாமல் செய்து வந்தார். தினமும் தாம் செய்த வேலைக்கு கூலியாக செந்நெல்லும் , கீரையும் கிடைத்தது. வறுமையில் தனது குடும்பமே வாடிய போதும் இறைவனுக்கே அவற்றை படைத்தார். ஒரு நாள் பெருமானுக்காக கீரையும் , நெல்லும் கொண்டு செல்லும்போது பசி மயக்கத்தில் அவை தவறி கீழே விழ , இன்று பெருமானுக்கு பூஜை செய்ய முடியவில்லையே என தனது கழுத்தை அறுத்து உயிர் விட துணிந்தபோது , பூமியில் இருந்து பெருமான் எழுந்தருளி அவரது கையை பிடித்து தடுத்து நிறுத்தினார். கீழே சிந்திய செந்நெல் , மாவடு, கீரையும் இருந்த இடத்தில் திருநீறு உருத்திராக்கம் அணிந்த கரங்கள் வந்து தம்மை தடுத்தது கண்டு நாயனார் மெய்சிலிர்த்து பெருமானை வணங்கினார். அப்போது நிலத்தில் இருந்து வெடுக் வெடுக் என்ற ஓசை கேட்டது. அது தாம் கொண்டு வந்த நிவேதன பொருட்களை எம்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்று எண்ணி அகம் மகிழ்ந்தார்.