பதிவு செய்த நாள்
12
பிப்
2022
05:02
பல்லடம்: பல்லடம் அருகே கோவிலில், அணையா விளக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டம் மூலம், 637வது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா முதல் அலையின்போது,, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் சொல்லமுடியாத இன்னல்களை சந்தித்தனர். இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளால் எண்ணற்ற குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டன. தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வேலை வாய்ப்பு, வருவாய் இழந்து பல குடும்பங்கள் ஒரு வேளை உணவுக்கும் எதார்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இக்கட்டான அச்சூழலில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து உணவு, உடை, மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் என, தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இதனால், ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள் பலர் பயன் பெற்றனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வதம்பச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீநெல்லுக்குப்பம்மன் கோவில் சார்பில், தொடர்ந்து, 637வது நாளாக நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பின்போது உணவு இன்றி யாரும் சிரமப்படக் கூடாது என்பதால், பொதுமக்கள் பங்களிப்புடன் கோவிலில் தினசரி பூஜைக்கு பின், மதிய உணவு வழங்கினோம். கொரோனா பாதிப்பு குறைந்த பின்னும், ஆதரவற்றோர், முதியவர்கள் பலர் தினசரி உணவு கேட்டு கோவிலுக்கு வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தினசரி மதிய உணவு வழங்க தீர்மானித்து, இன்றும் வழங்கி வருகிறோம். வள்ளலார் கூறியபடி, அணையா விளக்குபோல் அன்னதானத்தை தொடர்ந்து வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர். நகரப் பகுதிகளில், போதிய நிதி ஆதாரம், தன்னார்வலர்கள் இல்லாததால், கொரோனுவுக்கு பின் உணவு வழங்குவதை பலர் நிறுத்தி விட்டனர். இருந்தும், இதிலிருந்து வேறுபட்டு தினசரி அறுபதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவில் நிர்வாகம் தவறாமல் உணவளித்து வருவதை பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.