பதிவு செய்த நாள்
12
பிப்
2022
05:02
கோவை: ஒப்பணக்கார வீதி கோனியம்மன் கோவில் தேர் திருவிழா, ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் மயான பூஜை மற்றும் குண்டம் இறங்கும் விழா மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் உட்பட, பல்வேறு அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலெக்டர் சமீரன் கூறியதாவது:மாசாணியம்மன் கோவில் மயான பூஜை, 14ம் தேதியும், கோனியம்மன் கோவில் திருவிழா மார்ச் 2ம் தேதியும் நடக்க உள்ளன. திருவிழா நாட்களில் வழிபாட்டுதலங்களில் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்களை, தயார் நிலையில் கோவில் வளாகம் அருகே நிறுத்த வேண்டும். பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரம் தொடர்ச்சியாக தடையில்லா மின் விநியோகம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் அமைத்தல், தற்காலிக கழிப்பிட வசதிகள், குப்பை அகற்றுதல், தூய்மை பணிகளை மேற்கொள்தல், தேர் செல்லும் பாதையிலுள்ள மரக்கிளைகள், விளம்பர பதாகைகள் அகற்றும் பணிகளை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
உரிய பஸ் வசதி, போக்குவரத்து வழிமாற்றம், மருத்துவ உதவி வழங்க, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்தர்களுக்கு வழங்கும் உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.கோவிட்-19 முன்னெச்சரிக்கையாக, இந்த இரண்டு கோவில் விழாக்களில் வெளி மாவட்ட பக்தர்கள் கலந்து கொள்ள, தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.