பதிவு செய்த நாள்
12
பிப்
2022
05:02
திருநீர்மலை, -திருநீர்மலை, ரங்கநாதர் கோவில் குளத்தை, 11 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.குரோம்பேட்டையை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திப் பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கோவில் அடிவாரத்தில் குளம் உள்ளது. இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், சீரழிந்து விட்டது.பல இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்தும், குப்பைக் கழிவுகள் தேங்கியும், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இரவில், குளத்தின் கரையை, குடி மையமாகவும் மாற்றி வருகின்றனர். அதனால், குளத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்னை குறித்து, நமது நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, 11 லட்சம் ரூபாய் செலவில், இக்குளத்தை சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்த இடங்களில் சுற்றுச்சுவர் புதுப்பித்தல், குளத்தினுள் சரிந்த கரையை பலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இம்மாத இறுதிக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.