மஞ்சூர்: கீழ்குந்தா கிராமத்தில் "தெவ்வப்பா திருவிழா நேற்று சிறப்பு பூஜையுடன் துவங்கியது.படுகரின மக்களின் குல தெய்வ திருவிழாவான "தெவ்வப்பா திருவிழா நேற்று மாலை 4 மணிக்கு கிராம மக்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி, அர்த்தமனையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு துவங்கியது. இதற்கு குந்தைசீமை பார்பத்தி அன்னமலை முருகேஷன், கீழ்குந்தா ஊர் தலைவர் வசந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இன்று இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 14 ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து கீழ்குந்தா கிராமத்தில் உள்ள கோவிலில் இரவு முழுவதும் பஜனை நிகழ்ச்சி நடத்துவர். 14ம் தேதி காலை 11 மணிக்கு, 14 ஊர் தலைவர் போஜாகவுடர் தலைமையில், பாரம்பரிய சம்பிரதாயங்கள் படி சிறப்பு பூஜை நடக்கிறது.தொடர்ந்து, சிவன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2.30 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான அறுவடை செய்யப்பட்ட தானியங்களை (ஹரிகட்டுதல்) சாமிக்கு படைக்கு நிகழ்ச்சி நடக்கும். 15ம் தேதி சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.