சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் உலகெங்கும் பாடக் காரணமானவர் வேங்கடரமண பாகவதர். இவர் 1781ல் தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் மாசி மூலத்தன்று நன்னுசாமி பாகவதரின் மகனாக பிறந்தார். தெலுங்கு, சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற இவர், தியாகராஜ சுவாமிகளிடம் சங்கீதம் கற்றார். இதற்காக தினமும் 13 கி.மீ., நடந்தே திருவையாறு செல்வார். 26 ஆண்டுகால பயிற்சி பெற்ற இவர் சுவாமிகளின் கீர்த்தனைகளை ஓலையில் படியெடுத்து பாதுகாத்தார். திருமண வாழ்வை விரும்பாவிட்டாலும் சுவாமிகளின் கட்டளைக்காக 41வது வயதில் திருமணம் புரிந்தார். கிருஷ்ணசாமி, ராமசாமி என்னும் குழந்தைகள் பிறந்தனர். பிற்காலத்தில் கிருஷ்ணசாமி சுவாமிகளின் சீடராக விளங்கினார். ஒவ்வொரு ஏகாதசியன்று சுவாமிகளின் வீட்டு பஜனையில் வேங்கடரமண பாகவதர் பாடுவது வழக்கம். ஒருநாள் ஏகாதசியன்று ரமணர் வர தாமதமாகி விட்டது. மங்களம் பாடி விட சுவாமிகள் நினைத்தார். அப்போது சிறுவன் ஒருவன் சுவாமிகளின் மனைவி கமலாம்பாளிடம், ‘‘பாகவதர் வந்து கொண்டிருக்கிறார். அவர் இல்லாமலே உங்களின் கணவர் மங்களம் பாட நினைக்கிறார். பாகவதர் வந்து பாடினால்தான் ராமருக்கு திருப்தி ஏற்படும்’’ என்று சொல்லி மறைந்தான். பகவான் ராமரே சிறுவனாக வந்ததை அறிந்த சுவாமிகள் அதிசயித்தார். அப்போது பதட்டமுடன் வந்த பாகவதரை நோக்கி, ‘‘வாருங்கள் வேங்கடரமண பாகவதரே’’ என வரவேற்றார் சுவாமிகள். ‘தாமதமாக வந்ததால் இப்படி அழைக்கிறாரோ’ என வருந்தி மன்னிப்பு கேட்டார் பாகவதர். ‘‘பதறாதீர்கள். பகவான் ராமர் கொடுத்த பட்டம் இது’’ என வாழ்த்தினார். இப்படியாக காலம் ஓடியது. சுவாமிகளின் இறுதிக்காலம் நெருங்கிய போது சீடராக இருந்த பாகவதரின் மகன் கிருஷ்ணசாமியிடம், ‘‘எனது தம்புரா, பாதுகையை உன் தந்தையிடம் ஒப்படைத்துவிடு’’ என சுவாமிகள் வழங்கினார். சுவாமிகளின் மறைவுக்கு பின் வேலுார் வாலாஜாப்பேட்டைக்கு குடிபெயர்ந்ததால் பாகவதர், ‘வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்’ எனப் பெயர் பெற்றார். சுவாமிகளின் பாதுகை, அவரது கீர்த்தனைகளை அங்கேயே பாதுகாத்து வந்தார். பாகவதரின் மறைவுக்குப் பின் அவை மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் எனப்படும் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டது. ஆண்டுதோறும் பாகவதரின் ஜெயந்தியன்று தம்புரா ஊர்வலமாக எடுத்து வரப்பட்டும். இந்த ஆண்டு பிப்.26 ஜெயந்தியில் பங்கேற்று தியாகராஜ சுவாமிகள், வேங்கடரமண பாகவதரின் ஆசி பெறுவோம். பாகவதரைப் போற்றும் விதமாக அவரது 228வது பிறந்த ஆண்டான 2009ல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டது.