பதிவு செய்த நாள்
26
பிப்
2022
02:02
சென்னை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 1ம் தேதி மாலை 7.00 மணி முதல் 02ம் தேதி காலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை, திருவொற்றியூரில், வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள் புரிகிறார். மேலும், நாள் தோறும், உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் படைக்க, பக்தர்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற அருள் புரிகிறார். பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரிஸ்வரர் (சிவபெருமானின் முதல் வடிவம்) என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில், மூலவர் திருவாருர் தியாகேசரை ஒத்திருப்பதால், தியாகராஜ சுவாமி என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 1ம் தேதி மாலை 7.00 மணி முதல் 02ம் தேதி காலை 5.00 மணி வரை நடைபெறுகிறது. விழாவில் தொடர் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.