பதிவு செய்த நாள்
03
மார்
2022
10:03
பவானி: ஈரோடு மாவட்டம் பவானியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் திருக்கோவில் திருவிழாவில், பக்தர்கள் தங்கள் உடலில் சேறு பூசி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், பவானி செல்லாண்டியம்மவ் கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது, அம்மனுக்கு நாள்தோறும் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் சிறப்பு அலங்காரங்களில் வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மன் கருவறைக்குச் சென்று நேரடியாக புனிதநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சேறு பூசும் திருவிழா நேற்று நடந்தது. முதலில் அம்மன் அழைக்கும் நிகழ்ச்சிகாக கோவிலில் இருந்து படைக்கலங்களுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எல்லை மாரியம்மன் கோவிலுக்கு குதிரை அழைத்துச் செல்லப்பட்டு அலங்கரிக்கப்பட்டது, பின்னர் சிறப்பு வழிபாடுகளுடன் அம்மன் அழைத்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசியும், வண்ணப்பொடிகளை பூசியபடியும், காய்கறி மாலை அணிந்து கொண்டும் ஊர்வலமாக சென்றனர். பெண்கள் பழம் தேங்காய் மற்றும் பூஜைப் பொருட்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக கருமாரியம்மன், சிவன், பார்வதி, கருப்புசாமி மற்றும் ராவணன் வேடம் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காணப்பட்டனர். பவானி மேட்டூர் பிரதான சாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சேறுபூசும் திருவிழா நடந்ததால், பவானி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திருவிழாவில் ஈரோடு, கோவை ,சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அக்னி கரகம் எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.